உலகம்

இது பாகிஸ்தான் சென்டிமென்ட்!

இது பாகிஸ்தான் சென்டிமென்ட்!

webteam

பனாமா கேட் ஊழல் காரணமாக பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நவாஸ் ஷெரீப். இப்படி பாதியிலேயே பதவியை இழப்பது அவருக்கு இது ஒன்றும் புதிதல்ல. 1990-பிரதமரான ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டில் 1993-ல் பதவி இழந்தார். 1997-ல், 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றார். அப்போது ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப், ஷெரீப்பை நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். இப்போது 3-வது முறை பதவியிழந்துள்ளார்.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மட்டுமல்ல, இதுவரை எந்த பிரதமரும் தங்களது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்தது இல்லை. இதை பாகிஸ்தான் சென்டிமென்ட் என்கிறார்கள். ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் அல்லது பிரதமர் பதவியை, சொந்தக்கட்சியே பறிக்கும் அல்லது சட்ட நடவடிக்கைகளால் பதவி பறிபோகும் அல்லது வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டியது வரும் அல்லது கொல்லப்படுவதும் நடக்கும் என பாகிஸ்தான் அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

அந்த வகையில் தற்போது சட்ட நடவடிக்கையால் நவாஸ் ஷெரீப் பதவி பறி போயிருக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில், நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோன 2-வது பிரதமர் இவர். 2012-ம் ஆண்டு பிரதமராக இருந்த யூசுப் ராஸா கிலானி, அப்போதைய அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த மறுத்ததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் பதவி பறிப்புக்குள்ளானார்.

இப்போது பதவி விலகியுள்ள, நவாஸ் ஷெரீப்புக்கு பதிலாக, அவரது இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முதலமைச்சருமான ஷாபாஸ் ஷெரீப், புதிய பிரதமர் ஆகிறார். அவர், தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லை என்பதால் உடனடியாக பிரதமர் பதவி ஏற்க முடியாது. அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டும். அதற்குள் இடைக்கால பிரதமரை நியமிக்க கட்சி நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது.