ஹபீஸ் அப்ரூர் ரவூஃப் எக்ஸ் தளம்
உலகம்

பயங்கரவாதிக்கு இறுதிச்சடங்கு.. இந்தியாவின் கருத்தை மறுத்த பாகிஸ்தான்!

பயங்கரவாதியின் இறுதிச்சடங்கில் அரசு அதிகாரிகளும் இதர நபர்களும் கலந்துகொண்டது குறித்து பாகிஸ்தான் தற்போது பதிலளித்துள்ளது.

Prakash J

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலின்போது 100 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தவிர, கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளின் விவரங்களும் வெளியாகின. முடாசர் காதியான் காஸ், ஹாஃபிஸ் முகமது ஜமீல், முகமது யூசுப் அசார், காலித் என்ற அபு ஆகாஷா மற்றும் முகமது ஹசன் கான் என அவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில், காஸின் இறுதிச்சடங்கு, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமையில் அரசுப் பள்ளியில் நடைபெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

மேலும் அவரது இறுதிச்சடங்கில், காஸுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செலுத்தியது. இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், பஞ்சாப் காவல்துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அவர்கள், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. இதுகுறித்த படங்களை எடுத்துக்காட்டி, இந்திய அரசும் கடுமையாக விமர்சித்திருந்தது. மேலும், உலகிற்கு, பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்து தெரிவித்திருந்தது.

ஹபீஸ் அப்ரூர் ரவூஃப்

இந்த நிலையில், பயங்கரவாதியின் இறுதிச்சடங்கில் அரசு அதிகாரிகளும் இதர நபர்களும் கலந்துகொண்டது குறித்து பாகிஸ்தான் தற்போது பதிலளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (டிஜி ஐஎஸ்பிஆர்) இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, “இந்திய விமானப்படைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கிற்கு தலைமை தாங்கிய, அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் அப்துர் ரவூஃப் ஒரு சாதாரண குடிமகனே ஆவார். படத்தில் காணப்பட்ட நபர் ஒரு பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மதத் தலைவர். ஒரு பொதுவான குடும்ப மனிதர்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரின் தேசிய அடையாள அட்டையையும் (CNIC) வழங்கியுள்ளார். அவர், பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக்கின் (PMML) நலன்புரி பிரிவு பொறுப்பாளர் எனத் தெரிவித்துள்ளார்.

ஹபீஸ் அப்ரூர் ரவூஃப் யார்?

பாகிஸ்தானால் மதகுருவாக அடையாளம் காணப்பட்ட நபர், லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) மூத்த தலைவரும், தற்போது தடைசெய்யப்பட்ட ஃபலா-இ-இன்சானியத் அறக்கட்டளையின் (FIF) தலைவராகவும் உள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளின்கீழ் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவத்தால் வெளியிடப்பட்ட CNIC எண் (35202-5400413-9), பெயர் மற்றும் பிறந்த தேதி (மார்ச் 25, 1973) ஆகியவை அமெரிக்க கருவூலத் துறையின் தடைகள் பட்டியல்களில் உள்ள விவரங்களுடன் சரியாகப் பொருந்துகின்றன.