உலகம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 'அவசரநிலை' பிரகடனம்? அதிர்ச்சியூட்டும் காரணம்

ச. முத்துகிருஷ்ணன்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து "அவசரநிலை" பிரகடனப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சமீப நாட்களாக பாலியன் வன்கொடுமை சம்பவங்கள் அளவுக்கு அதிகமாக அரங்கேறுகின்றன. ஒரு நாளைக்கு 4 முதல் 5 வழக்குகள் பதிவாகி வருவதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அட்டா தரார், “மாகாணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவது சமூகத்திற்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் கடுமையான பிரச்சினையாக இருக்கிறது. பஞ்சாபில் தினமும் நான்கைந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் வற்புறுத்தல் போன்ற வழக்குகளை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சட்ட அமைச்சர் மாலிக் முஹம்மது அகமது கான் முன்னிலையில் கற்பழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அனைத்து வழக்குகளும் அமைச்சரவைக் குழுவால் பரிசீலிக்கப்படும். பெண்கள் உரிமை அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடமும் ஆலோசனை நடத்தப்படும். பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். பெண்கள் தங்கள் வீடுகளில் மேற்பார்வையின்றி தனியாக இருக்கக்கூடாது.

பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாலியல் பலாத்கார எதிர்ப்பு பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் உட்கொள்வது ஒரு நாகரீகமாக மாறியுள்ளது. இது குற்றங்களின் அதிகரிப்புக்கு பங்களிக்கிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை சமாளிக்க அவசரநிலையை பிரகடனப்படுத்த நிர்வாகம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.