பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள், அவரை விடுதலை செய்யக் கோரி இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாகச் சென்று கொண்டிருக்கின்றனர். மக்களின் கவனம் இம்ரான் கான் ஆதரவாளர்களை நோக்கியே குவிந்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், பாகிஸ்தான் ராணுவத்தின் சக்திவாய்ந்த தளபதியான ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீர் (Field Marshal Asim Munir) , அந்நாட்டின் தற்போதைய அரசியலையே மாற்றியமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களை சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரித்து புதிய மாகாணங்களை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்துப் பார்க்கலாம்.
பாகிஸ்தானில் தற்போது பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) என நான்கு மாகாணங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள், பாகிஸ்தானில் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டவை. அதாவது, பஞ்சாப் மாகாணம் ஷெரீப் குடும்பத்தின் அரசியல் கோட்டையாகவும், சிந்து மாகாணம் பூட்டோ குடும்பத்தின் (Bhutto Family) அரசியல் தளமாகவும் இருந்து வருகிறது. இந்த மாகாணங்களைப் பிரிப்பதன் மூலம், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் அதிகாரத் தளத்தை பலவீனப்படுத்த முடியும் என பாகிஸ்தானின் ராணுவத் தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், இது மாகாணங்களின் அதிகாரத்தை மேலும் குறைத்து, ராணுவத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் முயற்சி என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், ஒரு மாகாணத்தின் எல்லையை மாற்றுவது என்பது சாதாரண நிர்வாக முடிவு அல்ல. பாகிஸ்தான் அரசியலமைப்பின் Article 239(4)-ன் படி, ஒரு மாகாணத்தின் எல்லையை மாற்றும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அந்த மாகாண சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்த முறையில் மாகாணங்களை பிரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் சிந்து மாகாண சட்டப்பேரவை ஏற்கனவே இந்தத் திட்டத்தை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், சிந்துவின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் தெரிவித்தது.
இந்தச்சூழலில் தான், அரசியலமைப்பு நடைமுறையைத் தவிர்த்து தேசிய அளவில் வாக்கெடுப்பு நடத்தி புதிய மாகாணங்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, அசிம் முனீருக்கு இருக்கும் ராணுவ அதிகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிய மாகாணங்கள் குறித்த விவகாரமும் அதிகார மையப்படுத்தல் குறித்த கேள்விகளை தீவிரப்படுத்தியுள்ளது.