Model image x page
உலகம்

குழந்தையின் தொப்புள் கொடிகள்.. கடத்தலில் ஈடுபட்ட PAK. கும்பல்.. FIA விசாரணையில் வெளியான தகவல்!

மேலும், இந்தக் கும்பல் பாகிஸ்தானின் லாகூர், பெஷாவர் மற்றும் ராவல்பிண்டி போன்ற பிற பெரிய நகரங்களில் இருந்தும் கடத்தலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

Prakash J

தங்கம் கடத்தல்... போதை மருந்து கடத்தல் போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பாகிஸ்தானில் விநோதமாக மனித தொப்புள் கொடி கடத்தல் நடைபெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்ப காலத்தில் தாயையும் கருவையும் இணைக்கும் உயிர்நாடியாக தொப்புள் கொடி விளங்குகிறது. இது, தாயிடமிருந்து கருவுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கி, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது துண்டிக்கப்பட்டு, எஞ்சிய பகுதி சில வாரங்களில் தானாக உதிர்ந்துவிடும். அதேநேரத்தில், இந்த உயிரியல் திசுக்கள் ஸ்டெம் செல் (Stem Cell) ஆய்வு, உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்காக கருப்புச் சந்தையில் அதிக மதிப்புள்ளவையாகக் கருதப்படுகின்றன.

அந்த வகையில், மனித நஞ்சுக்கொடியாக அறியப்படும் இதை, பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் ஒன்று கடத்தி, ஏற்றுமதி செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​சட்டவிரோதமாகப் பதப்படுத்தும் மையம் ஒன்றில், தொப்புள் கொடி என நம்பப்படும் 500 கிலோ பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே வியட்நாமிற்கு கொண்டு செல்லப்படவிருந்த 100 கிலோ மனித உடல் திசுக்கள் அடங்கிய பெட்டகத்தை, FIA அதிகாரிகள் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நிலையில், இதுகுறித்த விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியது. FIA-இன் தகவல்படி, இந்த தொப்புள் கொடி ஸ்டெம் செல் சிகிச்சை, தோல் சுருக்கத்தை அகற்றி உடல் மூப்படைவதைத் தடுப்பது உள்ளிட்ட சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அவை, முதுமையைத் தடுக்கும் ஊசிகளாகத் தயாரிக்க வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அவற்றில் ஒவ்வொன்றின் விலையும் டாலர் மதிப்பில் 2,530 நிர்ணயம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தக் கும்பல் பாகிஸ்தானின் லாகூர், பெஷாவர் மற்றும் ராவல்பிண்டி போன்ற பிற பெரிய நகரங்களில் இருந்தும் கடத்தலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கும்பல், ஒவ்வொரு மாதமும் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 200 கிலோ (440 பவுண்ட்) உறுப்பை வாங்கியதாகவும், சில மருத்துவமனைகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோதமாக இது விற்பனை செய்யப்படுவதாகவும் FIA-இன் விசாரணையில் தெரியவந்துள்ளது.