உலகம்

“இம்ரான் கான் அரசுக்கு விடை கொடுக்க இஸ்லாமாபாத் செல்கிறேன்” - மர்யம் நவாஸ்

EllusamyKarthik

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், நாளை அந்த நாட்டின் பேரவையில் தனது ஆட்சியின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்கிறார். இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் அனைவரும் இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகின்ற பொதுப் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் இம்ரான் கான். அவர் இந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பதவி விலகுவார் என சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவர் மர்யம் நவாஸ், தான் இஸ்லாமாபாத் விரைவதாக தெரிவித்துள்ளார். 

“பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு அஸ்தமித்து விட்டது. அதனை நேரில் பார்த்து அரசுக்கு விடை கொடுக்க நாங்கள் இஸ்லாமாபாத் செல்கிறோம். மக்களும் இந்த ஆட்சியின் கதை முடிந்ததை சொல்லி வருகின்றனர். 

அதனால் கவிழ்ந்த இந்த அரசுக்கு விடை மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது. பிரதமர் என்னதான் மன்றாடி கூப்பாடு போட்டாலும் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இந்த ஆட்சி கவிழ எதிர்க்கட்சியினர் காரணம் இல்லை” என சொல்லியுள்ளார் மர்யம் நவாஸ். 

342 உறுப்பினர்களை கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 179 உறுப்பினர்களின் துணை கொண்டு ஆட்சி அமைத்தார் இம்ரான் கான். இந்நிலையில் அவரது கட்சியை சார்ந்த அமைச்சர்களில் 50 பேர் காணவில்லை என தெரிகிறது.