Pakistan ANI
உலகம்

ராட்சத இருளில் மூழ்கும் பாகிஸ்தான்! கடும் நெருக்கடியில் பொதுமக்கள்! வர இருக்கும் பெரிய ஆபத்து?

ராட்சத இருளில் பாகிஸ்தான் மூழ்கும் வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

PT WEB

இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததையடுத்து, பாகிஸ்தானில் விவசாயம், குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கராச்சி, லாகூர், முல்தான் நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமடைந்த நிலையில், கராச்சியில் 16 முதல் 24 மணி நேரம் வரை நீளும் மின்தடை பொதுமக்களை ராட்சத இருளில் தள்ளியுள்ளது. குறைந்த வருமானக் குடும்பங்கள், உழைக்கும் வர்க்கம் அதிக சுமையைச் சந்தித்து வருகின்றனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. எல்லையோர பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதால், பாகிஸ்தான் மீது இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. இதன்காரணமாக, சிந்து நதியை மட்டுமே முழுமையாக நம்பியிருந்த பாகிஸ்தானின் விவசாயத்துறை, பாசனநீர் இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டது. மேலும், கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய பெருநகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், தற்போது மற்றொரு அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி ஆகாமல் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாகிஸ்தானின் கராச்சி பிரஸ் கிளப்பில், சுத்தமான ஆற்றலுக்கான குடிமைச் சமூகம் என்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் மின்சார நெருக்கடி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என்றும், 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை, நீண்ட மின்தடைகளை பொதுமக்கள் சந்தித்து வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

electricity

இந்த நீண்ட நேர மின்தடையானது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மீது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். வடக்கு கராச்சி, நஜிமாபாத், குலிஸ்தான்-இ-ஜௌஹர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியின் மின் விநியோக நிறுவனமான கே-எலக்ட்ரிக் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, நாள் ஒன்று 12 மணி நேரம் வரை மின் வெட்டு செய்யப்படவுள்ள மின்சார கணக்குகளின் எண்ணிக்கையே பல லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தொடர்ச்சியான மின்தடை உழைக்கும் வர்க்கத்தினரை கடுமையாக பாதிப்பதாகவும், இந்த அத்தியாவசிய சேவையை ஒரு சலுகையாக பார்க்காமல், தங்குதடையின்றி வழங்க ஆட்சியாளர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், நுகர்வோருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை கராச்சி மின்சார வாரியத்தின் தனியார்மயமாக்கல் நிறைவேற்றவில்லை என்றும், அந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.