pakistan reuters
உலகம்

எல்லையில் 250 அதிநவீன பீரங்கிகள்.. இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்! பதிலடி தருமா மத்திய அரசு?

சீனாவிடம் இருந்து SH-15 என்ற அதிநவீன பீரங்கிகளை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.

PT WEB

பாகிஸ்தான், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் பாதிக்கப்பட்ட பீரங்கித் திறனை மீட்டெடுக்க சீனாவிடம் இருந்து SH-15 பீரங்கிகளை பெற்றுள்ளது. மணிக்கு 90 கிமீ வேகத்தில் நகரும் இவை, 72 கிமீ தூரம் வரை தாக்கும் திறன் கொண்டவை. இந்திய எல்லையில் 250 பீரங்கிகளை நிறுத்தியதால், இந்திய ராணுவ தளங்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

கடந்த 2025-ஆம் ஆண்டு, காஷ்மீரின் பஹல்காம் என்ற பகுதியில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு பாடம் எடுக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை தான் ஆபரேஷன் சிந்தூர்.

operation sindoor

இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததற்கு பதிலடி தரும் விதமாக தொடங்கப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையால், பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் பிரம்மோஸ் போன்ற அதிநவீன ஏவுகணைகளால் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலால், தங்களது பீரங்கித் திறன் பாதிக்கப்பட்டதாக கருதிய பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து SH-15 என்ற அதிநவீன பீரங்கிகளை வாங்கியுள்ளது.

மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பீரங்கிகள், வழக்கமான குண்டுகளை 30-40 கிமீ வரையும், ராக்கெட் உதவியுடன் செயல்படும் குண்டுகளை 53-72 கிமீ வரையும் சுடக்கூடியது. பொதுவாக பீரங்கிகள் மெதுவாக நகரும் தன்மை கொண்டவை.

ஆனால், பாகிஸ்தான் இந்த புதிய பீரங்கிகள், நிமிடத்திற்கு ஆறு குண்டுகள் வரை சுட்டுவிட்டு, எதிரிகளின் தாக்குதல் தொடங்குவதற்குள் விரைவாக அந்த இடத்தை விட்டு நகரும் திறன் கொண்டவை. இவ்வளவு அதிநவீன திறன் கொண்ட 250 பீரங்கிகளை, இந்தியாவின் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

PCL-181

இதன்காரணமாக, இந்தியாவின் பல ராணுவ நிலைகள் மற்றும் தளவாடப் பாதைகள், பாகிஸ்தானால் எளிதாக தாக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது. பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து தனது பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இவ்வளவு பெரிய ஆயுதக் குழுவை பராமரிப்பது பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க நிதி மற்றும் தளவாட வளங்களைக் கோரும் என்பது குறிப்பிடத்தக்கது.