உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்தா?

JustinDurai

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் வாவ்டா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு முக்கிய கூட்டணிக் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (மாா்ச் 31) தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைக்கும் வாய்ப்பு இம்ரான் கானுக்கு மங்கியுள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்  கட்சியின் மூத்த தலைவர் ஃபைசல் வாவ்டா  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ஃபைசல் வாவ்டா கூறுகையில் ''பிரதமர் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவரை படுகொலை செய்ய சதிகள் நடக்கின்றன. அதனால் பொதுக்கூட்டங்களில் பேசும்போது அவர் புல்லட் ப்ரூஃப் உடை அணிந்து கொள்ள உளவுத்துறை எச்சரித்துள்ளது'' என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய மாட்டார் என அமைச்சர் ஃபாவத் சவுத்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான் கடைசி பந்து வரை போராடும் வீரர் என்றும் அவர் கூறி உள்ளார்.

இதையும் படிக்க: பெரும்பான்மையை இழந்தது பாகிஸ்தான் அரசு - என்ன செய்ய போகிறார் இம்ரான் கான்?