பாகிஸ்தானில் எல்பிஜி சிலிண்டரின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இறக்குமதி தடை மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறைவால் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.
செய்தியாளர் - M.மீரா
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சந்தையில் நிலவும் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
12 கிலோ எடையுள்ள ஒரு சாதாரண வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 7,000 முதல் ரூ. 8,200 வரை (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்) விற்பனை செய்யப்படுகிறது. கைபர் பக்துன்வா போன்ற சில வட மாநிலப் பகுதிகளில் இதன் விலை ரூ. 10,000ஐயும் கடந்து வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
பாகிஸ்தான் - ஈரான் இடையிலான இரண்டு முக்கிய எல்லைச் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டதால், பாகிஸ்தானுக்கு சமையல் எரிவாயு (LPG) கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது மொத்த எல்பிஜி (LPG) தேவையில் சுமார் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. உள்நாட்டு உற்பத்தி வெறும் 30 சதவீதம் மட்டுமே என்பதால், வெளிநாட்டு விநியோகத்தில் ஏற்படும் சிறிய பாதிப்பும் விலையை கடுமையாக உயர்த்துகிறது.
மேலும் பாகிஸ்தானின் மொத்த எல்பிஜி இறக்குமதியில் சுமார் 50 சதவீதம் ஈரானில் இருந்துதான் வருகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் கடுமையான போர் பதற்றம் காரணமாக முக்கிய வர்த்தக எல்லையான தஃப்தான் (Taftan) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான எரிவாயு லாரிகள் எல்லையிலேயே முடங்கியுள்ளதால் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது
வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அங்கிருந்து வரும் கப்பல்கள் தாமதமாக வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. .