பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகளில் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அமைப்பு என்றால் அது லஷ்கர்-ஏ-தொய்பா (Laskhar-e-Taiba - LeT) அமைப்புதான்.
இந்தியாவையே உலுக்கிய 2001 நாடாளுமன்றத் தாக்குதல் (parliament attack 2001), 2005 டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள், 2006 வாரணாசி தாக்குதல், 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்புகள், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் (Mumbai Terrorist Attack 2008) , 2017 அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் என இந்தியாவை உலுக்கிய தாக்குதல்களின் மூளையாக இந்த அமைப்பு செயல்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிப்பதை தங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்கள், தளபதிகளைக் குறிவைத்து இந்தியா தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது. ’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போதும் இந்த அமைப்பின் தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
மேலும், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்பு இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்து இந்திய உளவுத்துறையான ரா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களான அப்துல் ரஹ்மான் மக்கி (Abdul Rehman Makki), அபூ துஜானா (Abu Dujana), அபூ துஜானா (Abu Dujana) , உமர் மஜீத் மிர் (Umar Majeed Mir), அபூ இஸ்மாயில் (Abu Ismail) ஆகியோர் இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதோடு சஜித் மிர் (Sajid Mir) மற்றும் அஸ்லம் போஹ்ரா (Aslam Bohra) போன்ற முக்கிய தலைவர்கள் பாகிஸ்தான் மண்ணில் வைத்து கொல்லப்பட்டதில் இந்திய உளவுத்துறையின் பங்கு உள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், இந்திய உளவுத்துறை ஏஜென்டுகள் பாகிஸ்தானில் நம் இயக்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்ததாக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தளபதி ரிஸ்வான் ஹனிஃப் (Rizwan Hanif) புலம்பும் வீடியோ வெளியாகியுள்ளது. இவர் பேசியதாக வெளியான வீடியோவில் பாகிஸ்தானின் பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, முசாபராபாத் மற்றும் ராவலாகோட் ஆகிய நகரங்களில் தங்களுடைய 30க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் தெரியாத நபர்களால் தொடர்ந்து இலக்கு வைத்துக் கொல்லப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இந்திய உளவு அமைப்புகள் செயல்படுவதாகவும் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு இந்திய உளவுத்துறையின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.