உலகம்

27.26%! பாகிஸ்தானில் உச்சத்தில் பணவீக்கம்! கடும் போராட்டங்கள் வெடிக்கும் அபாயம்?

ச. முத்துகிருஷ்ணன்

47 ஆண்டுகளில் இல்லாத அளவாக பாகிஸ்தானில் பணவீக்கம் 27.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடும் விலைவாசி உயர்வால் பாகிஸ்தானில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது என சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் 27.26 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஃபவுண்டேஷன் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஆய்வாளர் ஜீஷன் அசார் அந்நாட்டு மத்திய வங்கியின் தரவுகளை ஒப்பிட்டுப்பார்த்து 1975 ஆம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

உணவூ பொருட்களுக்கான பணவீக்கம் 29.5 சதவீதமாகவும், போக்குவரத்துக்கான பணவீக்கம் 63 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து ஆறு மாதங்களாக பணவீக்கம் பாகிஸ்தானில் தொடர்ந்து உயர்ந்து வருவது பொருளாதார ரீதியாக பெரும் சிக்கலை அந்நாட்டில் உருவாக்கி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதன் பாதிப்புகள் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து புதிய உச்சம் தொட வைத்துள்ளது.

47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம். கடும் விலைவாசி உயர்வால் அந்நாட்டில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து $1.1 பில்லியன் கடனைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.