Pakistan ANI
உலகம்

50 ஆண்டுகள் பின்தங்கிய பாகிஸ்தான்? நெருக்கடியால் கதறும் மக்கள்! நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டில் மிக கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

PT WEB

மத்திய கிழக்கு போரால் எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், பாகிஸ்தான் அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. புதிய வாகனங்கள் வாங்க தடை, அரசு வாகன எரிபொருள் 50% குறைப்பு, அரசு செலவுகளில் 5% வெட்டு, வெளிநாட்டு பயணத் தடை, திருமணங்களில் ஒரு உணவு மட்டுமே போன்ற கட்டுப்பாடுகள் அமலில். இதனால் பொருளாதாரம் 50 ஆண்டுகள் பின்தங்கும் அபாயம் எழுந்துள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரான் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீதும், அன்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும், ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. மேலும், தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை மூடியதால், உலகம் முழுவதும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு உருவானது. இவ்வாறு இரு தரப்புக்கும் இடையே நடந்த போரின் காரணமாக, உலக நாடுகள் பெரும் அவதிக்கு ஆளாகின.

இந்த நிலையில், இந்த போரால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பாகிஸ்தானால் இன்னும் மீள முடியவில்லை என்றும், அந்த நாட்டில் கடும் நெருக்கடி நிலை நீடித்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரினால் தீவிரமடைந்துள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்கவும் பாகிஸ்தான் அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

Petrol

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக பாகிஸ்தான் அமைச்சரவை பிரிவு அறிவித்துள்ளது. குறிப்பாக, அனைத்து வகையான புதிய வாகனங்களையும் வாங்க தடை, அரசின் வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளை 50 சதவீதம் குறைத்தல், அரசு ஊழியர்களின் சம்பளம் அல்லாத பிற செலவுகளில், 5 சதவீதத்தை குறைத்தல் போன்ற உத்தரவுகள், கொரோன காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. இதுமட்டுமின்றி, கூட்டாட்சி அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு 3 மாதங்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பொருளாதார வகுப்புப் பிரிவிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ள அரசாங்கம், அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் ஒரே ஒரு உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மோதல்களால் எழும்பியுள்ள எரிசக்தி விநியோகப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்துவரும் எண்ணெய் விலையைக் சமாளிக்க பாகிஸ்தான் அரசு இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த கடும் நெருக்கடியான சூழ்நிலையால், பாகிஸ்தானின் பொருளாதாரம் 50 ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாக, பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.