உலகம்

மசூத் அசார் சொத்துகள் முடக்கம்: அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டது பாகிஸ்தான்

webteam

சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத் தடைக்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ‌க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்திய தூதர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு, ஐ.நா. அமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அசாரை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஆதரவு அளித்தன. இருந்தபோதிலும், சீனா மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா-சீனா இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின்னர் இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என சீனா வெளியுறவுத்துறை தெரிவித்தது. அதன்படி சீனா விதித்து வந்த மறுப்பை நீக்கிக்கொண்டதால் மசூத் அசார் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத் தடைக்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. நேற்றிரவு பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஐநா தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மசூத் அசார் மீதான தடைகளை அமல்படுத்தவும், சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

ஆயுதங்கள், வெடிமருந்து வாங்கவோ, விற்கவோ அசாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. மசூத் அசார் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக அமல்படுத்தப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை நேற்று தெரிவித்திருந்த நிலையில், நேற்றிரவே இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.