model image chatgpt
உலகம்

உருவாகப்போகும் புதிய தேசம்.. நாலாபுறமும் நெருக்கடி.. PAK-க்கு சுத்துபோட்ட 4 பிரிவினர்!

நாலாபுறமும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ச்சிகளும், எழுச்சிகளும் எழத் தொடங்கியுள்ளதால், அந்நாடு சமீபகாலமாக கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

Prakash J

ஒரு நாட்டுக்கு ஒரு பக்கம் அடி என்றாலே, தாங்கிக் கொள்ள முடியாது; ஆனால், நான்கு பக்கமும் அடி என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அப்படியான ஒரு நிலைமையில்தான் நமது அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளது. வாருங்கள் இதுகுறித்துப் பார்க்கலாம்...

பாகிஸ்தானுக்கு நாலாபுறமும் எதிர்ப்பு

ஆப்கான் வெளியிட்ட அதிர்ச்சிப் பதிவு

"நமது பிராந்தியத்தில் ஒரு புதிய நாடு பிறக்கப் போகிறது என்பதற்கான முதற்கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன. அதன் பெயரை யூகியுங்கள்" என ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபரும், உளவுத்துறைத் தலைவருமான அம்ருல்லா சலே, கடந்த ஜூலை 15ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சுதந்திரத்தை அறிவித்த பலுசிஸ்தான்

இன்னொரு புறம், மிர் யார் பலூச் என்பவர், “பலுசிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் 85 சதவீத பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. பலுசிஸ்தானுக்கென தனியாக தேசிய கீதம், கரன்சி அறிமுகப்படுத்தியுள்ளோம். சர்வதேச சமூகம், இந்தியர்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் இதை அங்கீகரிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷீரில் போராட்டம்

அடுத்து, பாகிஸ்தானின் அடக்குமுறையையும் மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டங்கள் நீடிக்கின்றன. இறுதியாக, தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, தனது படைகளை கைபர் பக்துன்க்வாவிலும், குறிப்பாக முன்னாள் கூட்டாட்சி நிர்வாகப் பழங்குடியினர் பகுதிகளிலும் (FATA) முடக்கிவைத்துள்ளது.

இப்படி, நாலாபுறமும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ச்சிகளும், எழுச்சிகளும் எழத் தொடங்கியுள்ளதால், அந்நாடு சமீபகாலமாக கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

ஆப்கான் - பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை

ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, இருதரப்பிலும் கடுமையான கருத்து மோதலும் நிலவி வருகிறது. ஆப்கன் - பாகிஸ்தான் மோதல் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் பஸ்சிஸ்தான் மாகாணத்தின் எழுச்சி நாளுக்குநாள் வளர்ச்சி பெற்றுவருகிறது.

பலுசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் எழுச்சி

காவலர்கள், ராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை நடத்திவரும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், பல பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பாகிஸ்தானுக்கே சவால் விடுமளவுக்கே வளர்ந்துள்ளது. அந்த வகையில்தான், தற்போது சுதந்திரம் பெற்றதாகவும் அறிவித்துள்ளது.

அரசுக்கு எதிராக POKஇல் மக்கள் போராட்டம்

அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், வேலைவாய்ப்பு, சிறந்த கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் தீவிரப் போராட்டங்களை ’ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்‌ஷன் கமிட்டி’ என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்திவருகிறது. பாகிஸ்தான் அரசு, இந்த அமைப்பிற்குத் தடை விதித்துள்ளது. மேலும், போராட்டப் பேரணியைத் தடுப்பதற்காக, ஆளும் தரப்பு குறைந்தது 8,000 ரேஞ்சர்ஸ், காவல்துறை மற்றும் எல்லைப் படை வீரர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஆனாலும், அக்குழு தனது போராட்ட இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

புதிய தலைவலியாய் உருவான TTP

இறுதியாக, தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP)அமைப்பு, வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான், பன்னு, பஜௌர், கைபர் மற்றும் டேரா இஸ்மாயில் கான் ஆகிய பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது. காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், வணிக வளாகங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்துவதற்காக அறியப்பட்ட இவ்வமைப்பினர், தற்போது தங்களது எல்லையையும் தாண்டி, இதர மாவட்டங்களுக்கும் தனது வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இப்படி, ஒரேநேரத்தில் நாலாபுறத்திலும் உள்ள எதிரிகளின் நெருக்கடிகளையும் சவால்களையும் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. இதனால், பாகிஸ்தானில் இருந்து ஒரு புதிய தேசம் உருவாகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடிகள் சூழ்ந்துள்ளபோதிலும் அது, எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. தவிர, அனைத்தையும் எதிர்த்துப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.