உலகம்

பணம் வேண்டாமென்று அன்பு காட்டிய இந்திய டிரைவர்; விருந்து வைத்த பாக் வீரர்கள்-  நெகிழ்ச்சி சம்பவம்!

webteam

பாகிஸ்தான் வீரர்கள் என்றதும் பணம் வாங்க மறுத்து அன்பு செலுத்திய இந்திய டாக்ஸி டிரைவருக்கு, விருந்து வைத்து பாக் வீரர்கள் பதில் அன்பு செலுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. ஆனாலும் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரது மனதையும் வென்றுள்ளனர். அதற்கு காரணம், இந்திய டாக்ஸி ஓட்டுநருக்கு விருந்து வைத்து அன்பு செலுத்தியது தான். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாஷிர் ஷா, நாசிம் கான் உள்ளிட்ட சிலர், டாக்ஸி ஒன்றை பிடித்து உணவகத்திற்குச் சென்றுள்ளனர். 

டாக்ஸியை ஓட்டியவர் இந்தியர். தன் டாக்ஸியில் வந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் என தெரிந்துகொண்ட அந்த டாக்ஸி ஓட்டுநர் பயணம் செய்ததற்கு பணம் ஏதும் வேண்டாம் என அன்பாக மறுப்பு தெரிவித்துள்ளார். டாக்ஸி ஓட்டுநரின் அன்பால் நெகிழ்ந்துபோன பாகிஸ்தான் வீரர்கள் அவரையும் உணவகத்துக்கு உடன் அழைத்துச் சென்று விருந்து வைத்து பதில் அன்பை கொடுத்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சனிடம் இந்த தகவலை வர்ணனையாளர் அலிசன் தெரிவிக்க, இந்த நெகிழ்ச்சி சம்பவம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.

தற்போது உணவகத்தில் டாக்ஸி ஓட்டுநரும் கிரிக்கெட் வீரர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி பரவி வருகின்றன. இந்திய, பாக் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய ரசிகர்களும் பாக் வீரர்களுக்கும், டாக்ஸி ஓட்டுநருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.