உலகம்

குல்பூஷன் மரண தண்டனை வழக்கு: இந்தியாவுக்கு கெடு விதித்த பாகிஸ்தான்.. அது என்ன?

EllusamyKarthik

பாகிஸ்தான் நாட்டு ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்காக வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு கெடு விதித்துள்ளது பாகிஸ்தானில் உள்ள இஸ்லமாபாத் உயர்நீதிமன்றம். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் ஜாதவ் சார்பில் வாதாட வழக்கறிஞரை நியமிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.    

ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு கடந்த 2017-இல் மரண தண்டனை விதித்தது பாகிஸ்தான் நாட்டு ராணுவ நீதிமன்றம். 51 வயதான அவர் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாகவும் கூறி, பலுசிஸ்தான் பகுதியில் கடந்த 2016-இல் கைது செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. தொடர்ந்து 2017-இல் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. 

சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் அவருக்காக வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டது. அதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீண்டும் பரிசீலிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த மறுபரிசீலனை வழக்கில் ஜாதவ் சார்பில் வாதாடும் வழக்கறிஞரை கெடு தேதிக்குள் நியமிக்குமாறு இந்தியாவுக்கு தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.