அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ள சம்பவம் உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது.
உலகளவில் இன்றைய நாளில் அதிகம் பேசப்படும் ஒரு வார்த்தை அணுஆயுதம் என்பது தான். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அணுஆயுதம் பற்றிய பேச்சுகள் இல்லாத நிலையில், தற்போது அணுஆயுத சோதனையை உலக நாடுகள் சத்தமில்லாமல் நடத்தி வருவதாக டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. இதற்கிடையில் டிரம்ப் கூறும்போது, ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர்கள் பேச மாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, "பாகிஸ்தான் முதலில் அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. தற்போதும் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் நாடாக பாகிஸ்தான் இருக்காது. நாங்கள் முதலில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க மாட்டோம்" என்றார். அதேபோல், அணு ஆயுத சோதனை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. "சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது" என்று சீனா தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான ரஷ்யாவின் பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில் இந்த அணுஆயுத சோதனைகளை ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், ரஷ்யா அணுஆயுத சோதனையை மேற்கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ballestic ஏவுகணைகளையும், நீருக்கடியில் சென்று தாக்கும் Poseidon Super Torpedo ஆயுதத்தையும் சோதனை செய்ததாக ரஷ்யா தெரிவித்தது.
இது டிரம்ப்பின் Tomahawk ஏவுகணை குறித்தான பேச்சுக்கு பிறகு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவிலான இந்த அணு ஆயுத சோதனை ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தினாலும், இந்த சோதனையானது சோதனையளவிலேயே முடிவடைய வேண்டும் என்பதே உலக நாட்டு மக்களின் எண்ணமாக இருக்கிறது.