Pakistan Noor Khan Airbase  web
உலகம்

ஈரான் போர் | அமெரிக்காவுக்கே ஆப்பு.. ரகசியமாக காய் நகர்த்திய பாக்.. அடுத்து என்ன?

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் நடுநிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

PT WEB

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. எந்த முடிவும் எட்டப்படாத அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரண்டாவாதுகட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு தனது தூதர்கள் மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மற்றொரு முறை ஈரான் நிராகரித்த காரணத்தால், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வருகிறது. அதேநேரத்தில் இவ்விவகாரத்தீல் கடந்த ஒரு மாதமாக, பாகிஸ்தான் தன்னை ஒரு நடுநிலையான இடைத்தரகராக நிலைநிறுத்திக் கொண்டது. இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் வாஷிங்டன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பில் இருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க - ஈரான் மோதலில் தன்னை ஒரு 'மத்தியஸ்தராக' நிலைநிறுத்திக் கொண்ட பாகிஸ்தான், அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் இருந்து ஈரானிய இராணுவ விமானங்களைப் பாதுகாப்பதற்காக, தனது விமானத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்ததாக சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Pakistan Noor Khan Airbase

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர்நிறுத்தத்தை அறிவித்த உடனேயே, ஈரான் ஓர் உளவு மற்றும் கண்காணிப்பு விமானம் உட்பட பல விமானங்களை பாகிஸ்தானின் நூர் கான் விமானத் தளத்திற்கு அனுப்பியதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஎஸ் (CBS) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் மோதலில் பாகிஸ்தான் வகிக்கும் மத்தியஸ்த பொறுப்பை மறுமதிப்பீடு செய்யுமாறு செனட்டர் லிண்ட்சே கிரஹாம் வலியுறுத்தியுள்ளார்.

”இந்தச் செய்தித் தகவல் துல்லியமானதாக இருக்குமேயானால், ஈரான், அமெரிக்கா மற்றும் பிற தரப்பினருக்கு இடையே மத்தியஸ்தராகப் பாகிஸ்தான் வகிக்கும் பங்கை முழுமையாக மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்" என்று தென் கரோலினா செனட்டரான கிரஹாம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு மோதலில் இஸ்லாமாபாத் ஒரு மத்தியஸ்தராக தொடர்ந்து செயல்பட்டு வரும் வேளையில் இந்தச் செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி அறிக்கை இஸ்லாமாபாத்தின் நடுநிலைமை குறித்து புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்காவிடம் ஒரு நிலைப்பாட்டையும், ஈரானிடம் ஒரு நிலைப்பாட்டையும் காட்டும் பாகிஸ்தானின் இந்த இரட்டை நிலைப்பாடு, அமெரிக்க நிர்வாகத்திடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது.