உலகம்

மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

rajakannan

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று தொடக்கம் முதலே மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதோடு, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது, உலக நாடுகள் ஒருங்கிணைந்து இனி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், பாகிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள பிரதமர் இம்ராம்கான் தலைமையிலான அரசு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்திருந்தார். அதாவது, தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இம்ரான் அரசிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்க்கலாம் என்ற கருத்தினை அவர் கூறி இருந்தார். 

இத்தகைய சூழலில், பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில், 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜமாத்-உத்-தவா அமைப்பி தொண்டு பிரிவு நிறுவனமான ஃபலாஹ்-இ-இன்சானியாத் என்ற அமைப்பிற்கும் இந்தக் கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.