பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான உலகக் கோப்பை போட்டியை நேரில் பார்த்த பாகிஸ்தான் ராணுவ தலைவரை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
உலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடையே நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை நேரில் காண்பதற்கு நேற்று பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா நேரில் வருகை தந்திருந்தார். அவருடன் பாகிஸ்தான் ராணுவ மேஜர் மற்றும் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் பிரிட்டிஷ் வெளியுறத்துறை செயலாளர் ஜெர்மி ஹண்ட் உடன் இணைந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் மேஜரை அந்நாட்டு நெட்டிசன்கள் விமர்த்து வருகின்றனர். அந்த வகையில் அவாமி தேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோஹர் என்ற பெண்மணி வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தானின் தளபதி பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா போட்டியை காண தான் லண்டன் சென்றாரா ? ரொம்ப முக்கியம்.. இந்தப் பயணத்திற்கு யார் பணம் கொடுத்தது ? இதற்கு ஏழைகள் செலுத்திய வரிப் பணத்தை பயன்படுத்தவில்லை என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டுக்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் காஃபூர், “தயவு செய்து இதுபோன்ற தவறான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்த்துவிடுங்கள். பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வென்றது என்றை நாம் கொண்டாட வேண்டும். அவர்கள் அடுத்த போட்டியிலும் வெல்ல வேண்டும் என ஆதரவு கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.