ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் தாலிபன் அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இதனால் இருநாட்டு உறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும், தாலிபன் மீண்டும் தலைமைக்கு வந்ததற்குப் பிறகு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தான் தாலிபன்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. இதன்காரணமாக கடந்த மூன்று வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் தாலிபன் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ஆப்கான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆஃப்கனிஸ்தானின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்களை மட்டுமே தாக்கியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. காபூர் மற்றும் நகர்கர் பகுதியில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே தாங்கள் குறிவைத்து தாக்கியதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதை உறுதிப்படுத்தும் காட்சிகள் என ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானின் தாக்குதலில் காயமடைந்த பலர் காபூல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பாகிஸ்தானின் இச்செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தாக்குதல் கோழைத்தனமானது, மனசாட்சியற்றது என இந்திய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது. ஒரு கொடூரமான படுகொலையை, ராணுவ நடவடிக்கை எனப் பாகிஸ்தான் திசைதிருப்ப முயல்வதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இது பிராந்திய அமைதிக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் என்றும், தனது உள்நாட்டுத் தோல்விகளை மறைக்கவே பாகிஸ்தான் இத்தகைய வன்முறையில் ஈடுபடுவதாகவும் இந்தியா கூறியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார்.