பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

விற்பனைக்கு வரும் பாகிஸ்தான் விமானங்கள்.. ஏலம் எடுக்கும் பட்டியலில் முனீர் நிறுவனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் திட்டத்தின்கீழ் திட்டமிடப்பட்டபடி, நிதி திரட்டவும், பணத்தை வீணடிக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைச் சீர்திருத்தவும், தேசிய விமான நிறுவனத்தின் 51–100% பங்குகளை விற்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.

Prakash J

சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் திட்டத்தின்கீழ் திட்டமிடப்பட்டபடி, நிதி திரட்டவும், பணத்தை வீணடிக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைச் சீர்திருத்தவும், தேசிய விமான நிறுவனத்தின் 51–100% பங்குகளை விற்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.

அண்டை நாடான பாகிஸ்தான், கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதைச் சமாளிக்க உலக நாடுகளிடமும், சர்வதேச நிதியகத்திடமும் கடன் பெற்று வருகிறது. கடந்த 2020 முதல் பொருளாதாரப் பிரச்னைகளை அதிகளவில் சந்தித்துவரும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது பெரிய கடனாளியாக உள்ளது. அது, 1958 முதல் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 20க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், நஷ்டத்தில் இயங்கும் தேசிய விமான நிறுவனத்தை தனியார் மயமாக்க கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) விற்க பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 7 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாதநிலையில், இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்

இதற்கிடையே, பாகிஸ்தான் ஏர்லைன்ஸை கடந்த ஆண்டு விற்பனை செய்ய நடந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் திட்டத்தின்கீழ் திட்டமிடப்பட்டபடி, நிதி திரட்டவும், பணத்தை வீணடிக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைச் சீர்திருத்தவும், தேசிய விமான நிறுவனத்தின் 51–100% பங்குகளை விற்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.

அந்த வகையில் PIAவின் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், ”இந்த ஏலம் அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார். ஏலத்திற்கு முன்கூட்டியே தகுதி பெற்ற நான்கு நிறுவனங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஃபௌஜி அறக்கட்டளையின் ஒரு பகுதியான ஃபௌஜி உரக் கம்பெனி லிமிடெட் ஒன்றாகும். இது தவிர, லக்கி சிமென்ட் கன்சார்டியம், ஆரிஃப் ஹபீப் கார்ப்பரேஷன் கன்சார்டியம், ஏர் ப்ளூ லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் தகுதி பெற்றுள்ளன. இதில், ஃபௌஜி உர நிறுவனம், பாகிஸ்தானில் மிகப்பெரிய பெருநிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இன்று பாகிஸ்தானில் மிகவும் சக்திவாய்ந்த நபராக விளங்கும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஃபௌஜி இந்த அறக்கட்டளையின் மீது மறைமுக செல்வாக்கைச் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஷெரீப், முனீர்

PIA-வின் விற்பனை IMF-இன் பிணை எடுப்பு கடனுக்கு ஒரு முக்கிய நிபந்தனையாகும். PIA பங்குகளை விற்பனை செய்வது இரண்டு தசாப்தங்களில் பாகிஸ்தானின் முதல் பெரிய தனியார்மயமாக்கல் முயற்சியாக இருக்கும். முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டில் PIA ஒரு முழுமையான நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது 30%க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் விமானிகள் போலியான அல்லது கேள்விக்குரிய உரிமங்களுடன் பறக்கிறார்கள் என்கிற தகவல் வெளியானது. இது 262 விமானிகளை பணிநீக்கம் செய்ய கட்டாயப்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு ஊழல் குறித்த செய்திகளும் வெளியாகின. இந்த ஊழல் சர்வதேச அளவிலும் வெடித்தது. ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் (EASA) 2020 முதல் ஐரோப்பாவிற்கு PIA விமானங்களுக்கு தடை விதித்தது. அதிக வருவாய் ஈட்டும் வழித்தடங்களுக்கான அணுகலை அது இழந்ததால் விமான நிறுவனத்தின் ஆண்டு வருவாயில் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்பட்டது. பண நெருக்கடியையும் சந்தித்தது. அதே பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவும் தங்கள் சொந்த தடைகளைத் தொடர்ந்தன. இந்தக் கட்டுப்பாடுகள் PIAஇன் உலகளாவிய நற்பெயரைக் கெடுத்திருந்தது.