ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி தங்களது பதிலடியை கொடுத்து வருகின்றனர். கடந்த 9-ஆம் தேதி முதலில், ஆப்கான் தலைநகர் காபூலில் தெஹ்ரிக் ஈ தாலிபான் தலைவர் நூர் வாலியை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு பதிலடையாக கடந்த 11-ஆம் தேதி ஆப்கான் நடத்திய தாக்குதலில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சூளுரைத்தார்.
பின், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தியும் கடந்த 15-ஆம் தேதி இரு நாடுகளும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியும், பீரங்கிகளை கொண்டும் தாக்குதல் நடத்திக்கொண்டனர். மீண்டும் கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கு இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
கடந்த 17-ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 7 பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதனிடையே பாகிஸ்தான் திடீரென நடத்திய வான்வெளி தாக்குதலில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா, ஹாரோன் ஆகிய மூவர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான், ஆப்கான், இலங்கைவுடனான முத்தரப்பு தொடரை புறக்கணிப்பதாக அதிரடி முடிவையும் எடுத்தது.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குவது காட்டுமிராண்டித்தனமானது என்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகும் ACB இன் முடிவை நான் வரவேற்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நான் எங்கள் மக்களுடன் நிற்க வேண்டும் என தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆப்கான் - பாகிஸ்தான் இடையேயான எல்லை மீறிய தாக்குதல்கள் உடனடி நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 48 மணி நேரம் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் தாக்குதலால் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த உடனடி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், கத்தார் நாட்டின் Dohaவில் நடந்த பேச்சுவார்த்தையில், 48 மணி நேரம் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறியதாக பாகிஸ்தான் மீது ஆப்கான் குற்றம்சாட்டியது. அதே போல், சமீபத்தில் ஆப்கான் எல்லை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய ஒரு குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆப்கான் - பாகிஸ்தான் இருநாடுகளின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நிலைதன்மை கருத்தில் கொண்டு உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்றாலும் பாகிஸ்தான் இந்தியாவை எச்சரித்திருப்பதும் இந்தியா பாகிஸ்தானை எச்சரித்திருப்பதும் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.