உலகம்

"உங்களிடம் எல்லாம் இருக்கிறது; ஒன்றை தவிர" - இம்ரான் கான் மீது முன்னாள் மனைவி விமர்சனம்

ஜா. ஜாக்சன் சிங்

தன்னிடம் அனைத்தும் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதை அவரது முன்னாள் மனைவி ரேஹாம் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளதாார சரிவுக்கும், பண வீக்கத்துக்கும் பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள், அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீது நாளை மறுதினம் (ஏப்.3) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற கீழ் அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்கின்ற நிலையில், இம்ரான் கானுக்கு 150-க்கும் குறைவான உறுப்பினர்களே உள்ளனர். அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை பல கூட்டணிக் கட்சிகள் வாபஸ் பெற்றதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எப்படியும் வாக்கெடுப்பில் அவரது அரசு கவிழும் என்ற போதிலும், இம்ரான் கான் பதவி விலக மறுத்து வருகிறார்.

முன்னதாக, இம்ரான் கான் நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், இறைவன் அருளால் தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது. பணம், பெயர், புகழ் என அனைத்தும் தனக்கு இருக்கிறது எனக் கூறியிருந்தார்.

முன்னாள் மனைவி விமர்சனம்

இந்நிலையில், இம்ரான் கானின் பேச்சினை அவரது முன்னாள் மனைவி ரேஹாம் கான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நீங்கள் சொல்வது உண்மை தான். உங்களிடம் எல்லாம் இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் இல்லை. அதுதான், ஒரு நாட்டின் பிரதமருக்கு முக்கியமாக இருக்க வேண்டிய புத்திசாலித்தனம். அது உங்களிடம் இல்லை. அதேபோல, பாகிஸ்தான் மிக உயரிய இடத்துக்கு சென்றதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆம், நீங்கள் பிரதமராக வருவதற்கு முன்பு பாகிஸ்தான் உயர்ந்த இடத்தில்தான் இருந்தது" என ரேஹாம் கான் தெரிவித்துள்ளார்.