பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம் பெண், வீட்டுக்கு திரும்பி விட்டதாக வந்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
பாகிஸ்தானில், லாகூர் அருகில் உள்ள நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த 19 வயது சீக்கிய இளம் பெண் ஒருவர், கடத்தப் பட்டார். அவர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கட்டாய மதமாற்றத்துக்கு பாகிஸ்தான் சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவரும், ஷிரோமணி அகாலி தள எம்எல்ஏவுமான மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கும் வலியுறுத்தி இருந்தார்.
இதற்கிடையே, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சீக்கிய பெண்ணை மீட்ட போலீசார், அவர் பெற்றோரிடம் ஒப்படைத்ததாக இன்று காலை செய்தி வெளியானது. இதுதொடர்பாக 8 பேரை கைது செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தச் செய்தியை அந்தப் பெண்ணின் சகோதரர்கள் மறுத்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘எங்கள் சகோதரி இன்னும் எங்களிடம் திரும்பி வரவில்லை. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. எங்களுக்கான நீதியை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி, பஞ்சாப் மாநில ஆளுநர் ஆகியோருக்கு கோரிக்கை வைக் கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.