உலகம்

இந்து சிறுமியை கடத்தியவருக்கு ஆதரவாக பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

JustinDurai

பாகிஸ்தானில் 15 வயது இந்து சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, மதம்மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தா ஷாமன் மாக்சி. இந்து மதத்தைச் சேர்ந்த இச்சிறுமிக்கு வயது 15. இந்நிலையில் இந்த சிறுமியை கடந்த அக்டோபர் 13ம் தேதி முஸ்தபா தோகர் மற்றும் சவுகத் அலி என்ற இருவர் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அச்சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அக்கும்பல், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த, அச்சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், இதுகுறித்து போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் ஃபக்கீர் ஷிவா கச்சி, கடந்த ஹைதராபாத்தில் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், சந்தா ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

பின்னர், அச்சிறுமி கராச்சியில் இருந்து மீட்கப்பட்டு அனாதை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பாகிஸ்தானிலுள்ள  கராச்சி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அச்சிறுமியை பெற்றோரிடம் அனுமதிக்க மறுத்த நீதிமன்றம், கடத்தப்பட்டவரிடமே ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனால் அச்சிறுமியின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தீர்ப்பைக் கேட்ட அச்சிறுமி, தனது பெற்றோரையும், உறவினர்களையும் கட்டிப் பிடித்து அழுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாமே: பிரிட்டிஷ் வீரர்களின் தொப்பிகளுக்காக கொல்லப்படும் 100க்கணக்கான கரடிகள்.. ஏன் தெரியுமா?