பிரிட்டனை சேர்ந்த கப்பல் நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்கள் 800 பேரை ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல கப்பல் நிறுவனம் 'பி அண்ட் ஓ ஃபெர்ரிஸ்' (P&O Ferries). பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் கப்பல் பயண சேவைகளில் இந்த நிறுவனத்தின் கப்பல்கள் பயன்பட்டு வருகின்றன. இதனிடையே, கரோனா ஊரடங்கு காரணமாக இந்தக் கப்பல் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒருபகுதியாக, பல்வேறு கப்பல்களில் பணியில் இருந்த தனது ஊழியர்களின் செல்போன்களுக்கு பி அண்ட் ஓ ஃபெர்ரிஸ் நிறுவனம் நேற்று ஒரு வீடியோவை அனுப்பியது. அதில் அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தோன்றி, "தொடர் நஷ்டம் காரணமாக உங்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இன்றுதான் உங்கள் பணியின் கடைசி நாள் ஆகும். நீங்கள் இருக்கும் கப்பல்கள் வேறு புதிய ஊழியர்கள் மூலமாக தொடர்ந்து இயங்கவுள்ளன. அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளித்து கப்பல்களில் இருந்து இறங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறினார். நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் 800 கப்பல் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் கூறுகையில், "எந்தவித முன்னறிப்பும் இல்லாமல், ஒரு வீடியோ மூலமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது என்பது தொழிலாளர்கள் சட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது. இதற்கு நாங்கள் உடன்படப் போவதில்லை. சட்ட ரீதியாக போராட இருக்கிறோம். இப்போது எங்களை கப்பலில் இருந்து வெளியேற்ற தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் ஆட்களை எங்கள் நிறுவனம் நியமித்துள்ளதாக கேள்விப்படுகிறோம். என்ன நடந்தாலும், நாங்கள் கப்பல்களில் இருந்து இறங்கப் போவதில்லை" என்றார்.