உலகம்

தைவான் ராணுவத்திற்காக ஏவுகணைகளை தயார் செய்த அதிகாரி திடீர் மரணம்!

JustinDurai

தைவான் ராணுவத்திற்காக ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் கடும் அதிருப்தியில் இருக்கிறது சீனா. இதையடுத்து தைவானை அச்சுறுத்தும் விதமாக சீன ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் ரஷ்யா-உக்ரைன் போல் சீனா-தைவான் இடையே போர் மூளும் என்று பல தரப்பிலும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தைவான் ராணுவத்திற்காக ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தைவான் அரசுக்கு சொந்தமான தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்  துணைத் தலைவராக பணியாற்றி வரும் ஊயன் லீ ஜிங், ஏவுகணை உற்பத்தி தொடர்பான பிரிவை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் பணி நிமித்தமாக  தைவான் தெற்குப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஊயன் லீ ஜிங், இன்று காலையில் ஒரு ஹோட்டலில் மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்து கிடந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார். ஊயன் லீ ஜிங் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: தைவானை தனி நாடாக விளம்பரப்படுத்திய ஸ்னிக்கர்ஸ் -எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்பு கோரியது