உலகம்

பாலியல் வன்கொடுமை வழக்கு - இரு ஆஸ்கார் விருதுகள் பெற்ற இயக்குனர் கைது

ச. முத்துகிருஷ்ணன்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற இயக்குனர் பால் ஹக்கீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டை சேர்ந்த பால் ஹக்கீஸ் , கடந்த 2006-ம் ஆண்டு கிராஷ் என்ற படத்தில் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக ஆஸ்கார் விருது பெற்றவர். மேலும் அந்த படத்தை தயாரித்ததற்காக “சிறந்த படத்திற்கான” ஆஸ்கார் விருதையும் வென்றார் ஹக்கிஸ். ஒரே மேடையில் இரு ஆஸ்கார் விருது வென்று சாதனை படைத்த வெகு சிலருள் பால் ஹக்கிஸும் ஒருவர்.

இவர் இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவிற்கு சென்ற போது, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இத்தாலி காவல்துறையினர், பால் ஹக்கீஸை கைது செய்து அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் “வீட்டுக்காவலில்” வைத்துள்ளனர். வியாழக்கிழமை நடைபெற உள்ள விசாரணைக்கு பின்னரே ஹக்கிஸை சிறையில் வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

“இத்தாலிய சட்டத்தின் கீழ், நான் ஆதாரங்களை விவாதிக்க முடியாது. பால் ஹக்கீஸ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிராகரிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். விசாரணை முடிந்த பின்பு அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும்” என அவரது வழக்கறிஞர் பிரியா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பால் ஹக்கீஸ் சிக்குவது இது முதல் முறையல்ல! 2018 ஆம் ஆண்டு பால் ஹக்கீஸ் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு பதிலடியாக அந்த பெண்களில் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும் தன்னை மிரட்டி 9 மில்லியன் டாலர் பறிக்க முயன்றதாகவும் கூறி அதிர வைத்தவர் பால் ஹக்கீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.