திரைக்கலைஞர்களின் பெருங்கனவான ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில், ஷான் பேக்கர் இயக்கிய ’அனோரா’ திரைப்படம், 5 பிரிவுகளில் விருதுகளைக் குவித்து கவனம் பெற்றது.
இந்த விழாவில், சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருது ’நோ அதர் லேண்ட்’ படத்திற்காக வழங்கப்பட்டது. இந்த விருதை இஸ்ரேலிய பத்திரிகையாளரான யுவல் ஆபிரகாம், பாலஸ்தீனிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான பாஸல் அட்ரா, ஹம்டன் பல்லால் மற்றும் ரேச்சல் சோர் ஆகியோர் மேடையேறிப் பெற்றுக் கொண்டனர்.
அப்போது ஆபிரகாமும், அட்ராவும் ஆற்றிய ஏற்புரை, விழாவின் ஒரு முக்கிய தருணமாக மாறியது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வை நிறுத்தவும் அவர்கள் அழைப்புவிடுத்தனர். இதில் பேசிய அட்ரா, “பாலஸ்தீன மக்களின் அநீதியைத் தடுக்கவும் இன அழிப்பைத் தடுக்கவும் உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அடுத்துப் பேசிய ஆபிரகாம், “காஸா போர் மற்றும் அதன் மக்களின் அழிவு, விரைவில் முடிவுக்கு வர வேண்டும். கொடூரமாகப் பிடிபட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்த அவர், இரு சமூகங்களின் பின்னிப் பிணைந்த தலைவிதியை அங்கீகரிக்கத் தவறியதற்காக உலகத் தலைவர்களைச் சாடினார்.
'நோ அதர் லேண்ட்' திரைப்படம் மேற்குக் கரையில் உள்ள ஒரு பாலஸ்தீனிய குடும்பம் தங்கள் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்ததை ஆவணப்படுத்துகிறது. இது ஆக்கிரமிப்பிற்கான மனித செலவைக் காட்டுகிறது. பாலஸ்தீனம் மற்றும் நார்வே இடையேயான கூட்டுத் தயாரிப்பான இந்தத் திரைப்படம், பிப்ரவரி 16, 2024 அன்று 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு சிறந்த ஆவணப்படத்திற்கான பனோரமா பார்வையாளர் விருதையும் பெர்லினேல் ஆவணப்பட விருதையும் வென்றிருந்து குறிப்பிடத்தக்கது.