கொரிய தீபகற்பத்தில் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னை நீண்டகாலமாக நீடித்துவரும் நிலையில் வடகொரியா, தொடந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இருகொரியாவையும் இணைக்கும் முயற்சியை கைவிட வடகொரியா அரசு அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்ததுடன், தென்கொரியாவை முதல்முறையாக ஓர் எதிரி நாடு என்று குறிப்பிட்டது. தொடர்ந்து, தென்கொரியா உடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாகத் துண்டித்தது. இதன்படி வடகொரியாவில் இருந்து தென்கொரியா செல்லும் சாலை, ரயில்வே வழித்தடங்களை தனது ராணுவத்தின் மூலம் வெடிவைத்து தகர்த்தது.
மேலும், எல்லைப்பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து, தடுப்புகள் ஏற்படுத்தி, கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. மேலும், வடகொரியா மீது தென்கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என வடகொரியா எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்த நிலையில், தென்கொரியா அரசு, நேற்று திடீரென அவசரகால ராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது.
இதுகுறித்து உரையாற்றிய அந்நாட்டு அதிபர் யூன் சுக் யியோல், ”வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கவும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், அவசரகால ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதும் தென்கொரியாவின் நாணயம் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேநேரத்தில், அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தன. மேலும் இதுதொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தின. மேலும், ராணுவ சட்ட அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தமுள்ள 300 பேரில் 190 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். இதனை தொடர்ந்து அதிபர் யூன் சுக் யியோல், ”அவசரநிலை நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை நாங்கள் வாபஸ் பெற்றுள்ளோம். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை நாங்கள் ஏற்று, மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும்” என அறிவித்தார்.
இந்த நிலையில், தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் கொரியாவின் அதிபரை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3-ல் இரண்டு பங்கு ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் யூன் தானாக முன்வந்து ராஜினாமா செய்யாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்யப்போவதாக எதிர்க்கட்சி மிரட்டியுள்ளது. ஒருவேளை, யூன் பதவி விலகினாலோ அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ தென் கொரிய அரசியலமைப்பு பிரதமர் ஹான் டக்-சூ அதிபர் கடமைகளை செய்ய வேண்டும் என அந்நாட்டுச் சட்டம் தெரிவிக்கிறது.