உக்ரைன் ராணுவம், ஸ்பைடர்வெப் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் கீழ், ரஷ்யாவின் உள் பகுதிகளில் உள்ள இர்குட்ஸ்க், முர்மான்ஸ்க், இவானோவோ, ரயசான் மற்றும் அமூர் ஆகிய ஐந்து ராணுவ விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவின் TU-95, TU-22M, A-50 போன்ற முக்கிய ராணுவ விமானங்கள் உள்பட 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு படையால் 18 மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டு, அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நேரடி மேற்பார்வையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரோன்கள், மரப்பெட்டிகளில் மறைக்கப்பட்டு, ரஷ்யாவின் மத்திய மற்றும் சைபீரிய பகுதியிலுள்ள விமானத் தளங்களுக்கு அருகில் உள்ள உக்ரைனின் எல்லைகளில் பதுக்கப்பட்டன. இவை ரஷ்யாவின் மத்திய ராணுவ விமானங்களை குறிவைத்து தாக்கின. அப்போது பலத்த வெடிச்சத்தம் கேட்டதுடன், புகை மண்டலமாக காட்சி அளித்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மேலும், முதல் முறையாக சைபீரியாவில் உள்ள விமான தளம் ஒன்றின் மீதும் ஆளில்லா ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. ஆனால், முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க் பகுதிகளில் உள்ள விமானங்கள் தீப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் என கூறியுள்ள ரஷ்யா, சிலர் கைது செய்யப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. உக்ரைனின் உக்கிரமான இந்த தாக்குதல் இஸ்தான்புலில் நடைபெறவுள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னர் ஏற்பட்டதால், இரு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.