trump, Anthropic x page
உலகம்

ட்ரம்பை எதிர்த்த அமெரிக்க நிறுவனம்.. எதிர்காலம் என்ன ஆகும்? ஒப்பந்தம் போட்ட ஓபன் ஏஐ!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனினும். ஆந்த்ரோபிக் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தையே எதிர்த்திருப்பதால், அதன் முடிவு எதிர்காலத்தையே பாதிக்கும் எனக் கூறப்படுகிறது

அதிபர் ட்ரம்ப் உடன் மோதிய ஆந்த்ரோபிக்

இன்று, உலகமே செயற்கை நுண்ணறிவு துறையால் வேகம் பிடித்துள்ளது. அனைத்துத் துறைகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதனால், அதே தொழில்நுட்பத்தில் போட்டிகளும் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில், ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி), கூகுள் (ஜெமினி), எக்ஸ் (குரோக்) ஆகியவற்றுக்கு மத்தியில் ஆந்த்ரோபிக் (Claude ஏஐ) குறிப்பிடத்தகுந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது. இதன் வரவு, பங்குச் சந்தைகளிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில்கூட, இந்த நிறுவனம் சீனா மீது குற்றஞ்சாட்டியிருந்தது. டீப்சீக், மூன்ஷாட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ தொழில்நுட்பத்தைத் திருடிவிட்டதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கும் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை (பென்டகன்) உள்ளிட்ட முக்கிய துறைகள் ஆந்த்ரோபிக் உடைய Claude ஏஐ சேவையை பயன்படுத்தி வந்தன. அண்மையில், ”ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தை ராணுவப் பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும்” என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் வலியுறுத்தி இருந்தார். ஆனால், ஆந்திரோபிக் நிறுவனம் இதற்கு வெளிப்படையாகவும், முழுமையாகவும் மறுத்துவிட்டது. ”மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீகரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல” என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி மறுத்துவிட்டார்.

ட்ரம்ப்

உத்தரவிட்ட டொனால்டு ட்ரம்ப்

எனவே பென்டகன் உடனான ஆந்த்ரோபிக் ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது. இது, அதிபர் ட்ரம்பின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளது. இதுதொடர்பாக ட்ரம்ப், “ஆந்த்ரோபிக் தொழில்நுட்பம் எங்களுக்குத் தேவையில்லை, அதை நாங்கள் விரும்பவில்லை. இனி அந்த நிறுவனத்துடன் எந்த வணிகமும் செய்யப் போவதில்லை" என்று தெரிவித்துள்ள அவர், “ராணுவம் எப்படிப் போராட வேண்டும் என்று ஒரு தனியார் நிறுவனம் கட்டளையிடுவதைச் சகித்துக்கொள்ள முடியாது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் பாதுகாப்புத் துறை போன்ற அமைப்புகள், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஆந்த்ரோபிக் நிறுவனத்தைத் 'தேசிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலிக்கு அச்சுறுத்தல்' (Supply chain risk) என்று அறிவித்துள்ளார். அந்த நிறுவனத்தின் முடிவு, அதன் அகங்காரத்தையும் துரோகத்தையும் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஓபன் ஏஐ நிறுவனம் ஒப்பந்தம்

மறுபுறம், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆந்த்ரோபிக் 200 மில்லியன் டாலர் மதிப்பை இழந்துள்ளது. பணத்தின் தேவை, அதற்கு பொருட்டில்லை என்பதால், அதைப்பற்றி அந்த நிறுவனம் கவலை கொள்ளவில்லை. எனினும். ஆந்த்ரோபிக் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தையே எதிர்த்திருப்பதால், அதன் முடிவு எதிர்காலத்தையே பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ட்ரம்ப் அரசாங்கம் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தடை விதித்த சில மணி நேரங்களிலேயே, ஓபன் ஏஐ நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் பயன்படுத்தப்படும் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் சில கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்க குடிமக்களைக் கண்காணிக்கக் கூடாது என்றும், தாக்குதல் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் என்றும் சாம் ஆல்ட்மேன் தெளிவுபடுத்தியுள்ளார். தானியங்கி ஆயுதங்கள் தொடர்பான முடிவுகளிலும் மனிதத் தலையீடு அவசியம் என்பது ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாப்புத் துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, ஓபன்ஏஐ நிறுவனம் தனது சிறப்புப் பொறியாளர்களை நேரடியாகப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்ற அனுப்ப உள்ளது.

anthropic

ஆந்த்ரோபிக் நிறுவனம் என்பது என்ன?

ஆந்த்ரோபிக் நிறுவனம் 2021இல் முன்னாள் ஓபன் ஏஐ ஊழியர்களால் தொடங்கப்பட்டது. முன்பு, ஓபன் ஏஐ நிறுவனத்தில் துணைத் தலைவர்களாக பணியாற்றிய டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் 2021இல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஆந்த்ரோபிக் என்ற நிறுவனத்தை தொடங்கினர். தற்போது, இந்த நிறுவனம் டாரியோ அமோடி தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கிளாட் (Claude) என்ற AI மாடலை உருவாக்கி ஏஐ துறை போட்டியில் பெரும் ஆதிக்கத்தை பெற்றுள்ளது. சாட்ஜிபிடியுடன் போட்டியிடும் இந்த மாடல் AI பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு மீது அதிக கவனம் செலுத்துவதாக அறியப்படுகிறது. தவிர, ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.