டீ குடிக்காத, டீயை பிடிக்காத ஆட்களை பார்ப்பதே அரிதாகவே இருக்கும். சாமானியர்கள் முதல் உலகின் பெரும் பணக்காரர்கள் வரை தேநீர் தவிர்க்க முடியாத ஒரு பாணமாகவே மாறிவிட்டது எனலாம். டீ குடிப்பதற்காகவே பல்வேறு காரணங்களை தேடி கண்டுபிடித்து வேலைக்கு இடையே பிரேக் எடுத்து செல்வோரும் உண்டு.
ஒரு கப் டீயும் சில பிஸ்கட்டுகளை சாப்பிட்டு ஒரு நாள் முழுவதையும் கடத்துவோரும் உண்டு. இப்படியாக டீ ஒரு தனிநபரின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிறது. அதுவும் பிளாக் டீ, லெமன் டீ, ஜிஞ்சர் டீ, ஹெர்பல் டீ என எக்கச்சக்கமான வகைகளில் விற்கப்படும் டீக்கள் பலரையும் கவர தவறுவதில்லை. ஆனால் அனைத்து தரப்பினராலும் விரும்பி குடிக்கக் கூடிய டீக்களில் ஒரு வகை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா?
பாண்டா கரடிகளின் சாணத்திலிருந்து தேயிலை சாகுபடி நடக்கிறது என்றால் ஏற்க முடிகிறதா? ஆம். தென்மேற்கு சீனாவின் தொழில்முனைவோரான வனவிலங்கு நிபுணரும், சிஞ்சுவான் பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஆன் யான்ஷி என்பவர்தான் புதுமையான தேநீரை பயிரிட்டு வருகிறார்.
இதற்காக பாண்டா கரடிகளின் சாணத்தை அதற்கான இனப்பெருக்க மையங்களில் இருந்து பெற்று, அதனை கரிம உரமாக பயன்படுத்தி தேயிலையை உற்பத்தி செய்திருக்கிறார். ஏனெனில் மூங்கில்களையே பெரும்பாலும் பாண்டாக்கள் உண்பதால் அதன் கழிவுகளில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்திருக்கிறதாம்.
மோசமான செரிமான அமைப்பைக் கொண்டிருக்கும் பாண்டாக்கள், அவை உண்ணும் எல்லாவற்றிலும் சுமார் 30 சதவிகிதத்தை மட்டுமே உறிஞ்சுகின்றன எனக் ஆஸ்திரேலியாவின் SBC.com இடம் கூறியிருக்கியிருக்கிறார் ஆன் யான்ஷி.
மேலும், பாண்டாக்களின் கழிவுகளை உரமாக பயன்படுத்துவதால், அதிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஊட்டச்சத்து நிறைந்தவையாக உள்ளது. இது கருத்தரித்தல் முறைக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்க வல்லது. இதனை நகைச்சுவைக்காக கூறவில்லை என்றிருக்கிறார்.
இதுபோக, கிரீன் டீயை போல, மூங்கில்களில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதனை தேயிலைக்கு உரமாகப் பயன்படுத்தினால், கிரீன் டீயின் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என யான்ஷி தெரிவித்திருக்கிறாராம்.
இப்படியாக பாண்டாவின் சாணத்தில் இருந்து யான்ஷி தயாரித்த டீயின் வெறும் 50 கிராம் மட்டுமே சுமார் 2 லட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்கப்பட்டிருக்கிறதாம். பாண்டா சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த ஒரு கிலோ தேநீர் 52 லட்சத்துக்கு விற்கப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது உலகின் மிக விலையுயர்ந்த ஆடம்பரமான தேநீர்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.