இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு உணவு விடுதியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கொழும்புவின் கத்தனா பகுதியில் ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்குரிய பையில் இருந்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் அந்த வெடிகுண்டைக் கைப்பற்றி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர்.
இதனிடையே கொழும்பு அருகே வெள்ளவத்த என்ற இடத்தில் உள்ள சவாய் திரையரங்கு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஸ்கூட்டர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் கிடைத்த நிலையில், அங்குவந்த காவல்துறையினர், ஸ்கூட்டரை ஆய்வு செய்தனர். கட்டுப்படுத்தப்பட்ட வெடியை பயன்படுத்தி ஸ்கூட்டரின் சீட் திறக்கப்பட்டது. ஆனால் அந்த ஸ்கூட்டரில் வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. ஆயினும் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனங்கள் கொழும்பில் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியானதால் இலங்கை மக்களிடையே அச்சம் நிலவுகிறது.