mango
mango file image
உலகம்

உலகின் விலை உயர்ந்த மாம்பழம்; ஒரு பழம் ரூ.19 ஆயிரம், 1 கிலோ ரூ2.7 லட்சம்! அசத்தும் ஜப்பான் விவசாயி!

Prakash J

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மாம்பழம் என்றால் யாருக்குத்தான் எச்சில் ஊறாது. அப்படிப்பட்ட மாம்பழங்கள் எல்லாம் அற்புத சுவை தரக்கூடியவை. இந்தியாவின் பல பகுதிகளில் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தில்கூட சேலம் மாவட்டம் மாம்பழத்திற்குப் புகழ்பெற்றதாகும். தற்போது மாம்பழ சீசன் என்பதால் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. நம்மூரில் கிலோ 60 ரூபாயில் ஆரம்பித்து ரூ. 250 வரை விற்கப்படுகிறது (ஒவ்வொரு வகைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது).

இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த விவசாயி ஒருவர், 1 மாம்பழத்தை ரூ.19 ஆயிரத்துக்கு (கிலோ 2.7 லட்சம் ரூபாய்க்கு) விற்பனை செய்து வருவது ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள ஓட்டோஃபுக்கைச் சேர்ந்தவர், நககாவா. இவர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மாம்பழங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். அவருடைய மாம்பழங்கள் இந்த ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதற்கு, அங்கு நிலவும் பனியும் வெப்ப நீரூற்றுகளுமே காரணம். அப்படியான பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இந்த மாம்பழம்தான் சுவை மிக்கதாக மாறியுள்ளது.

இதுகுறித்து நககாவா, “பல ஆண்டுகளாக எண்ணெய் வியாபாரம் செய்துவந்த நான், 2011ஆம் ஆண்டு முதல் மாம்பழ சாகுபடிக்கு மாறினேன். இதுகுறித்த ஆலோசனையை வேறொரு மாம்பழ விவசாயியிடம் பெற்றேன். இங்கிருக்கும் பனியும் வெப்ப நீரூற்றுகளும்தான் மாம்பழத்தைச் சுவை மிக்கதாக மாற்றியுள்ளது. குளிர்காலத்தில் கிடைக்கும் பனியைச் சேமித்து, அதை, கோடைக்காலத்தில் வெப்பத்தைத் தணிக்க பயன்படுத்திக் கொள்வேன். அதேபோல குளிர்காலத்தில் இயற்கையான வெப்ப நீரூற்றுகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் அறையை வெப்பமாக மாற்றுவேன். இதன்மூலம் தாம் பூச்சிக்கொல்லிகளை (கெமிக்கல்கள்) பயன்படுத்தி மாம்பழங்களை உற்பத்தி செய்வது கிடையாது. அங்கே நிலவும் குறைந்த ஈரப்பதம் கொண்ட காலநிலை, கெமிக்கல் பயன்பாட்டைக் கணிசமாகவே குறைக்கிறது.

அந்த வகையில் இங்கே உருவாகும் மாம்பழங்கள், மற்ற சாதாரண மாம்பழங்களைவிட 15 டிகிரி பிரிக்ஸ் அதிக சர்க்கரை கொண்டவை. தவிர, இம்மாம்பழங்கள், வெண்ணெய் போன்ற மென்மையான அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த வகையில் சீசன் ஒன்றுக்கு 5 ஆயிரம் மாம்பழங்களை அறுவடை செய்கிறேன். இந்த மாம்பழங்கள் அருகே இருக்கும் உள்ளூர் கடைகளில் ஃபிரஷாகவே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குளிர்காலத்தில் வேலை குறைவாகவே இருக்கும் தொழிலாளர்களுக்கு மாம்பழங்களைப் பறிக்கும் வேலை தந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுகிறேன். எனது மாம்பழ உற்பத்திக்கு ’ஹகுகின் என்கிற டிரேட் மார்க்கையும் பெற்றுள்ளேன். இயற்கையான முறையில் மாம்பழத்தை உற்பத்தி செய்வதே எனது நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

நககாவாவின் நிரந்தர வாடிக்கையாளர்களில் ஆசியாவின் சிறந்த பெண் செஃப் 2022 என்கிற விருதைப் பெற்ற நட்சுகோ ஷோஜியின் உணவகங்களும் அடங்கும். இங்கு தயாரிக்கப்படும் மாம்பழப் பூ கேக்குகளில் நககவாவின் மாம்பழங்களே பயன்படுத்தப்படுகின்றன.

2014 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள இசெட்டன் பல்பொருள் அங்காடியில், தனது மாம்பழத்தை விற்பனைக்கு வைத்தார். அது, கிட்டத்தட்ட 400 டாலர்களுக்கு விற்பனையாகியதுடன், உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகவும் இடம்பெற்றது. இப்போது அவருடைய ஒரு மாம்பழம் 230 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதாவது நம்மூர் மதிப்புக்கு கிட்டத்தட்ட ரூ.19 ஆயிரம். ஆனாலும் விவசாயி நககாவா இன்னும் திருப்தி அடையவில்லை. டோகாச்சியை குளிர்காலத்தில் பழ உற்பத்தி மையமாக மாற்றவும், சமூகத்தின் பொருளாதாரத்திற்கு உதவவும் அவர் நினைக்கிறார். அதே நுட்பத்தைப் பயன்படுத்தி மற்ற வெப்பமண்டல உணவுகளை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.