உலகம்

இதய வடிவ கருப்பைக்குள் இரட்டையர்கள் - 500 மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் அதிசயம்

Sinekadhara

இதய வடிவ கருப்பைக்கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்த அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் 25 வயதான கேரன் ட்ராய். ஜனவரி 2021ஆம் ஆண்டு கேரன் கருவுற்றதைக் கண்டு மகிழ்ச்சியுற்ற தம்பதியருக்கு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது கேரனின் கருப்பையானது இதய வடிவில் இருப்பதாகவும், அதில் இரட்டைக்கரு உருவாகியிருப்பதாகவும் கூறியுள்ளனர். மருத்துவர்கள் இதனை bicornuate uterus என்று அழைக்கின்றனர்.

ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதய வடிவில் கருப்பை இருக்கும். அதிலும் இரட்டைக்கரு உருவாவது என்பது 500 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே நடக்கக்கூடிய அரிய நிகழ்வாகும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தங்கள் முதல் குழந்தை கருவுற்றிருந்த போது ஸ்கேன் செய்திருந்தாலும் கேரனின் கருப்பையானது இதய வடிவில் இருந்தது அவர்களுக்கு தெரியவில்லை.

”எனக்கு கருப்பை இதய வடிவில் இருந்ததைவிட இரட்டை குழந்தைகள் உருவாகி இருந்ததே எனக்கு அதிக கவலை அளித்தது. குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா என்பதை மட்டுமே உறுதி செய்துகொண்டேன்.

முதலில் எனது கருப்பை இதய வடிவில் இருப்பதாக கூறியபோது நான் நம்பவில்லை. அதனை உறுதிசெய்ய மற்றொரு இடத்தில் சென்று ஸ்கேன் செய்துபார்த்தேன். இது அதிக ரிஸ்க்கான கர்ப்பம் என்பதால் என்மீது மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். 34 வாரங்கள் நன்றாக இருந்தேன். இருப்பினும் pre-eclampsia என்று சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும் நிலை ஏற்பட்டதால் அறுவைசிகிச்சை மூலமாகவே குழந்தைகள் எடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, ரேயான் மற்றும் ரேலின் ஆகியோர் பிறந்தனர். இருவரும் 27 நாட்கள் NICU-வில் வைக்கப்பட்டனர். ஆனால் 4 நாட்களில் நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டேன்.

முதன்முதலில் அவர்களைப் பார்த்தபோது மிகவும் குட்டியாக இருந்ததைக்கண்டு உணர்ச்சிகரமானதாக உணர்ந்தேன். அதேசமயம் இரு குட்டி குழந்தைகளை பார்த்து சற்று பயந்தேன். முதல் 24 மணிநேரங்கள் மிகவும் கடினமானதாக இருந்தது. Pre-eclampsia இருந்ததால் வலிப்பு வராமல் இருக்க எனக்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தது. உணவு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க குழந்தைகள் NICU-வில் வைக்கப்பட்டிருந்தனர். ஏனெனில் ரேயானின் இதயத்துடிப்பில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி இருந்தது. தற்போது இரட்டைக்குழந்தைகள் இருவருக்கும் 16 மாதங்கள் ஆகிறது. அவர்களின் மோட்டார் திறன்களில் சிறிது தாமதம் இருந்தாலும் இருவரும் நலமாக உள்ளனர்” என்கிறார் கேரன்.