அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட இழப்புகளைவிட, ஒமைக்ரானால் 17 சதவிகித உயிரிழப்புகள் அதிகரித்து காணப்பட்டது தெரியவந்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவிடாமல், அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசால் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் டெல்டா கொரோனா பாதிப்புகளை விட ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்று தி சியாட்டில் டைம்ஸ் அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தப்போதிலும், உலக முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டது. அதிலும் அமெரிக்காவில், அந்த தேதியில் இருந்து இதுவரை அமெரிக்காவில், 3 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 600 புதிய பாதிப்புகளும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 750 புதிய உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இதே டெல்டா கொரோனா வகை பாதிப்புகளை ஒப்பிடும் பொழுது, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்காவை ஆட்டி படைத்த டெல்டாவால், 1 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 590 புதிய பாதிப்புகளும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 616 புதிய உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் அலையால், டெல்டா பாதிப்புகளை விட 17 சதவிகித கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.