உலகம்

எலியை பிடித்துக் கொடுப்பதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமா? எங்கு தெரியுமா?

JananiGovindhan

வீடுகளில் ஓரிரண்டு எலிகள் இருந்தாலே அதனால் படாதப்பாடு பட வேண்டி இருக்கும். எப்படியாவது அதனை கூண்டுக்குள் அடைத்து வெளியேற்றிட மாட்டோமா என்று இருக்கும். ஆனால் அமெரிக்காவின் முக்கியமான நகரமான நியூயார்க்கில் பல ஆண்டுகளாக எலிகளின் தொல்லையால் நித்தமும் போராடி வருகிறார்கள் அந்த நகரத்து மக்கள்.

எலிகளை ஒழிப்பதற்காகவே அமெரிக்க அரசு ஆண்டுக்கு மூன்று மில்லியன் டாலர்களை செலவழிக்கிறதாம். இருப்பினும் எலிகளின் தொல்லையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் நியூயார்க் நிர்வாகம் திணறி வருகிறது. இப்படி இருக்கையில், எலிகளின் தொல்லையை தீர்க்க எவரும் முன்வந்தால் பெரும் தொகையை கொடுக்க தயாராக இருப்பதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்திருக்கிறார்.

இதுபோக கொறித்திண்ணிகளான எலிகளை ஒரேடியாக அகற்ற ஒரு வேலைவாய்ப்பையே நியூயார்க் நகர நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான விளம்பரங்கள் அமெரிக்காவின் பல்வேறு செய்தித் தாள்கள் மூலம் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எலிகளை அழிக்க எவர் முன்வந்தாலும் பெரும் தொகையை கொடுக்க தயாராக இருப்பதாகவும், அவைகளின் எண்ணிக்கையை அடக்க முறையான திட்ட மேலாண்மை, நகர்ப்புற திட்டமிடல் திறன் கொண்டவர் மற்றும் கொலையாளிக்கான உணர்வோடு இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என மேயர் எரிக் ஆடம்ஸ் விளம்பரம் செய்துள்ளார்.

நியூயார்க்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த 2022ம் ஆண்டில் எட்டு மாதங்களில் எலிகள் பற்றிய புகார்களில் 70 சதவிகிதம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எலிகளின் அச்சுறுத்தல்களை தடுக்க புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் இரவு 8 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு மேல் குப்பைகளை வீடுகளுக்கு வெளியே கொட்டும்படி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இருப்பினும் நியூயார்க்கை சுற்றி எலிகள் எதிர்த்து போராடுவது சவாலாக இருப்பதால், இந்த புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே எலிகளை கொல்வதற்கான தேவையான உந்துதல் மற்றும் கொலையாளி உள்ளுணர்வு ஒருவருக்கு இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்வதில் வெற்றிபெறும் எவருக்கும் $170,000 வரை அதாவது ரூ.1.13 கோடி வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் மேயர் எரிக் அறிவித்துள்ளார்.