நார்வே நாட்டைச் சேர்ந்தவர் அர்வே ஜால்மர் ஹோல்மென். இவர், சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் (ChatGPT) தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார். அதாவது, ‘அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்’ என சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த சாட்ஜிபிடி, "ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயைச் சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொருவருக்கு ஏழு வயது. இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020ஆம் ஆண்டு அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹோல்மென், நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகி, அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார். இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹோல்மென், “யாராவது இந்த தகவலைப் படித்து அது உண்மை எனப் பலரும் நம்பும் பட்சத்தில், அதுவே எனக்கு பயத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.