உலகம்

‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’- மிகப்பெரிய ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

‘கண்டம் விட்டு கண்டம் பாயும்’- மிகப்பெரிய ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

webteam

அமெரிக்காவின் எந்தவொரு ராணுவ தாக்குதலையும் முறியடிக்கும் வகையில் அணு ஆயுத ஆற்றல் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை விண்ணில் செலுத்தி, வடகொரியா சோதனை செய்துள்ளது.

வடகொரியா 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளை விட, இந்த ஏவுகணை எதிர்பார்த்ததை விட அதிகப்படியான தூரம் வரை செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று, எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்திருப்பதன் மூலம் அமெரிக்காவின் எந்தவொரு ராணுவ சவால்களையும், தங்களது ராணுவம் முறியடிக்கும் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கிடையில் வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணை தங்களது கடலில் விழுந்ததாக ஜப்பானிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்த கூடுதல் தகவல்களை ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வழங்கவில்லை. வட கொரியா அண்மை காலமாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.