உலகம்

வடகொரியாவில் அணுஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை கண்டுபிடிப்பு?

webteam

சர்ச்சைகளுக்கும் உலக நாடுகளின் கண்டனத்திற்கும் பெயர்பெற்ற வடகொரியா, தற்போது ஏவுகணையில் ஏற்றும் அளவிற்கு சிறியதான ஒரு அணுஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதேசமயம் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அந்த அணுஆயுதம் பெரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் கூறப்படுகிறது. சக்திவாய்ந்த மற்றும் நவீன ஆயுதங்கள் பலவற்றை வடகொரியா வைத்துள்ளது என சர்வதேச நாடுகளால் கருதப்பட்டாலும், ஏவுகணையில் ஏற்றும் அளவிற்கு சிறிய அணுஆயுதத்தை உருவாக்கிவிட்டதா என்ற சந்தேகம் இதுவரையிலும் உறுதிசெய்யப்படவில்லை.

ஆனால் சர்வேத நாடுகளின் எச்சரிக்கையை மீறியும், ஐ.நாவின் அறிவிப்புகளை கண்டுகொள்ளாமலும் அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியா, இதுபோன்ற ஆயுதத்திற்கு பெரிதளவில் நிதி ஒதுக்கி, அதனை உருவாக்கியிருக்கும் என்பது பல நிபுணர்கள் மத்தியில் நம்பப்படுகிறது. 

இதற்கிடையே சமீபத்தில் ஜப்பான் மீது சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை வடகொரியா பறக்கவிட்டதும், பின்னர் அது கடலில் போடப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. அத்துடன் வடகொரியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருவதும் அதிகரித்துள்ளது. ஆனால் தனது செயல்பாடு குறித்து கூறும் வடகொரியாவோ, தங்களின் ஏவுகணை சோதனைகள் பசிஃபிக் பிராந்திய நாடுகள் மீதான ராணுவ நடவடிக்கையின் தொடக்கம் தான் என்று கூறிவருகிறது.