உலகம்

வடகொரிய அதிபர் சகோதரர் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் மறுப்பு

webteam

வடகொரிய அதிபரின் சகோதரரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும், தாங்கள் கொலை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவுக்கு வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நம் விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது முகத்தில் அபாயகரமான ரசாயனத் திரவத்தை வீசிய இந்தோனேஷியாவின் சித்தி ஆயிஷா, வியட்நாமின் தை ஹூவாங் என்ற இரு இளம்பெண்களை மலேசிய காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட ‌விசாரணையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இந்த படுகொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக இரு பெண்களும் இன்று ஷா ஆலம் உயர்‌நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரும் கிம் ஜாங் நம்மை கொலை செ‌ய்யவில்லை என்றும், ஒரு தொலைக்காட்சியின் ஏமாற்றும் நிகழ்ச்சிக்காக அந்த அமில‌த்தை அவர் மீது வீசியதாகவும் தெரிவித்தனர். இவ்வழக்கில் இருவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மலேசிய சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.