உலகம்

”உணவு உற்பத்தியில் மாற்றங்களைச் செய்யுங்கள்” - பஞ்சத்தை சமாளிக்க வடகொரிய அதிபர் ஆலோசனை!

webteam

வடகொரியாவின் உணவுப் பஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன், முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியா, மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. காரணம், அந்த நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்றே செய்திகள் வெளியாகிறது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில்கூட 4 ஏவுகணை சோதனைகளைச் சோதித்துப் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வடகொரியாவில் தற்போது கடும் உணவுப் பஞ்சம் நிலவி வருவதாகவும், அதைக் கடுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. உணவுப் பஞ்சத்தால் அங்குள்ள மக்கள் பலர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இதனை அந்த நாட்டு அரசு மறுத்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு அதிகம் செலவிடுகிறது. பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, வடகொரியா உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உணவுப் பஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவைக் கூட்டினார்.

இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உணவு உற்பத்தியில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில்அரசின் முழு கவனம் தானியங்கள் உற்பத்தியில் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் நாட்டில் உணவுப் பஞ்சத்தின் நிலை மிகமோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.