மியான்மர் ரோஹிங்ய விவகாரம், உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் வடகொரியா உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் பூதாகரமாகி வரும் நிலையில் ஐ.நா. சபை இன்று கூடுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இருவரும் பதவியேற்றப் பின் முதல் முறையாக ஐ.நா. சபையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர்களுடன் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உரையில் பெரும்பாலும் வடகொரியா விவகாரம் குறித்தே இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மியான்மரில் இருந்து லட்சக்கணக்கான ரோஹிங்ய இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்து வரும் விவகாரம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. இது தவிர பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் இயற்கை பேரிடர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலக நாடுகளில் பரவி வரும் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.