உலகம்

வட, தென் கொரிய நாடுகளுக்கிடையே பேச்சு: ஐநா வரவேற்பு

வட, தென் கொரிய நாடுகளுக்கிடையே பேச்சு: ஐநா வரவேற்பு

webteam

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நடைபெறவுள்ள பேச்சு வார்த்தைக்கு ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

வடகொரியா ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றன. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தென்கொரியாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, தென்கொரியாவுடன் பேசுவதற்கு வசதியாக ஹாட்லைன் தொலைபேசி வசதியை தொடங்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் ஹாட்லைன் தொலைபேசி மீண்டும் துவக்கப்பட்டது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் நிலவிய பதற்றமான சூழலை தணிக்க உதவும். இது அமைதி திரும்புவதற்கான முதல் படியாகவே பார்க்கப்படுகிறது என கூறினார்.