உலகம்

வடகொரிய - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு

webteam

வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரு கொரிய அதிபர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா சென்றுள்ள தென் கொரிய பிரதிநிதிகள் அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து, இரு நாட்டுக்கும் இடையே மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும், வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பியாங்யங்கில் ஒன்று கூடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.முன்னதாக அணு ஆயுதம் இல்லாத கொரிய தீபகற்பத்தை உருவாக்க கிம் ஜாங் உன் மீண்டும் உறுதி அளித்திருப்பதாகவும், தென் கொரியாவுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள தமது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியதாகவும், தென் கொரிய‌ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.