Masoud Pezeshkian & Mohsen Rezaei  reuters
உலகம்

போர் வேண்டாம்.. பணியவும் மாட்டோம்.. அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த புதிய செக்!

அமெரிக்கா-ஈரான் மோதல்: அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு புதிய முன்மொழிவு

PT WEB

மத்திய கிழக்கு மோதல்களில் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஈரான், அமெரிக்காவுக்கு புதிய அணுசக்தி முன்மொழிவை அனுப்பியுள்ள நிலையில், 7 நிபந்தனைகளை நிறைவேற்றாமல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால், மத்தியஸ்த நாடுகள் போருக்கு முடிவுகாண முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

செய்தியாளர் - M.மீரா

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே, லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பும் சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

iran war

இந்நிலையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் போர் தொடங்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து நிராகரிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதனால், போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்த நாடுகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அணுசக்தி தொடர்பான புதிய முன்மொழிவு ஒன்றை ஈரான் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கத்தார் நாடு மூலமாக இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

iran war

ஆனால், அமெரிக்கா முதலில் ஈரான் விதித்துள்ள 7 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஈரான் அனுப்பியுள்ள முன்மொழிவை அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரியான மொஹ்சென் ரெசாயி, ரஷ்யாவுக்குச் சென்றுள்ள நிலையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் விதித்துள்ள 7 நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப்போவதில்லை என்றும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.