Mojtaba & Trump  ANI
உலகம்

ஈரானைத் தாக்கினால்.. அமெரிக்காவின் கூட்டாளியிடம் இருந்து வந்த எதிர்ப்பு குரல்!

ஈரான் மீது தாக்குதல்: ஈராக் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதி இல்லை!

PT WEB

அமெரிக்கா ஈரானை தாக்கினால், ஈராக் தனது நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அலி அல்-ஜைதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான ஈராக், ட்ரம்புக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈராக் நாட்டின் நிலப்பரப்பையோ, ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியபோது இந்த நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான தளமாக ஈராக் மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Ali al-Zaidi

இதற்கிடையே, ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுவாத் ஹுசைனும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது ஈராக்குக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்கா, ஈரான் மற்றும் ஈராக்கில் செயல்படும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களால் ஈராக் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் போர் ஏற்பட்டால் ஈராக் மக்களும் ராணுவமும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

iran war

மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு முன்பைவிட மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் எச்சரித்துள்ளது. இந்த முறை போர் ஏற்பட்டால் அது மேற்கு ஆசியாவுடன் மட்டும் நின்றுவிடாது என்றும், ஈரானின் தாக்குதல் இலக்குகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமேனியா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், ஆயுதங்கள், வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் நலன்கள் எனப் பலவும் ஈரானின் தாக்குதல் இலக்குகளாக மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.